ஊரடங்கில் தவில் கலைஞராக மாறிய 9 வயது சிறுமி… பெற்றோர்கள் மகிழ்ச்சி…!

தமிழகம்


தமிழர்களின் நாகரீகத்தில் தவில், நாதஸ்வர இசைகளுக்கு என்று என்றுமே தனியிடம் உண்டு. மங்கள இசைக்கு மயங்காத மனமும் இல்லை, கரையாத மனமும் இல்லை. கோவில்கள், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் என நாதஸ்வர கச்சேரி இருக்கும். நாதஸ்வர பணியாளர்களை பொறுத்த வரையில் பெரும்பாலும் ஆண்கள், சில பெண்களும் மட்டுமே கலைஞர்களாக இருப்பார்கள். ஊரடங்கு காலத்தில் சிறுமியும் தவில் வித்துவானாக மாறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியை சார்ந்தவர் நாகராஜ். இவர் தவில் இசைக்கலைஞராக இருந்து வரும் நிலையில், தன்னை நாடிவருவோருக்கு தவில் கலையை கற்றுக்கொடுக்கிறார். இவர் வசிக்கும் தெருவில் நுழைந்தாலே தவில் மற்றும் நாதஸ்வர மங்கள இசையோசை சத்தம் வரவேற்கும்.

நாகராஜிடம் 9 வயது சிறுமியான நிஷாந்தினி தவில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நிலையில், உறவினரின் மகளான நிஷாந்தினிக்கும் நாகராஜ் தவில் கற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் தவில் கலையை கற்றுக்கொண்ட சிறுமி நிஷாந்தினி, தற்போது தவில் கலைஞராக மாறியுள்ளார்.

நிஷாந்தினியின் பெற்றோரும் நாதஸ்வர தவில் கலைஞர்களாக இருந்து வந்த நிலையில், அவர்களின் வாரிசான நிஷாந்தினியும் தவில் கலையை கற்றுக்கொண்டுள்ளார். மேலும், அவர் தனது குரு நாகராஜ் மூலமாக எளிமையான முறையில் தவில் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கற்பதில் ஆர்வமாக இருந்த சிறுமி துவக்கத்தில் தளர்ந்தாலும், பின்னாளில் சிறந்த முறையில் தவில் வாசிக்க கற்றுக்கொண்டதாக நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் விருப்பத்தை புரிந்துகொண்ட பெற்றோர்கள், அவரின் விருப்பப்படி தவில் கலைஞர்களில் புகழ்பெற்று இருந்தவர்களை போல வர வேண்டும் என்றும் விரும்பியுள்ளனர்.