வடக்கில் இன்று இதுவரை 31 பேருக்கு கொரோனா – மேலும் அதிகரிக்கலாம்!

கொரோனாத் தொற்று உறுதி

வடக்கில் இன்று 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பசார் பகுதியைச் சேர்ந்த 25 வர்த்தகர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காகச் சென்ற இருவருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் தொற்றுடன் இனங்காணப்பட்டவரின் கடைக்குச் சென்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் உடல் நலமின்மையால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்குச் சென்றபோது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பல்கலைக் கழக விரிவுரையாளராவார்.

பளையில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்று திரும்பி வந்த 11 பேரில் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. எஞ்சிய ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று 427 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த முடிவுகளே தற்போது வந்துள்ளன. யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூட முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.