மனைவிக்காக 15 நாட்களில் கிணறு வெட்டிய கணவன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.!

இந்தியா

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தில் பானிபூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சார்ந்தவர் பரத் சிங் (வயது 46). இவரது மனைவி தினமும் சுமார் அரைகிலோமீட்டர் தூரம் சென்று, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் மூலமாக தண்ணீர் சேகரித்து வந்துள்ளார்.

இவர்களது குடும்பத்தில் 4 பேர் இருந்த நிலையில், தினமும் நீண்ட நேரம் தண்ணீர் எடுக்கவே காத்திருக்க வேண்டி இருந்துள்ளது. மேலும், ஒருநாள் அந்த அடிகுழாய் பழுதானாலும், தண்ணீருக்கு பெரிய சிரமம் ஏற்படும் சூழல் இருந்துள்ளது.

கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த பரத் சிங், மனைவி தண்ணீருக்காக கஷ்டப்படுவதையும், தண்ணீருக்காக குடும்பமே படும் கஷ்டத்தையும் எண்ணியுள்ளார். இதனையடுத்து வீட்டில் உள்ள காலியிடத்தில் கிணறு வெட்ட முடிவு செய்துள்ளார்.

கிணறு வெட்ட நிதி வசதி இல்லாததால், தானாகவே கிணறு தோண்டும் முடிவில் இறங்கி 15 நாட்கள் கிணறு தோண்டியுள்ளார். இதனையடுத்து கிணறில் நீர் ஊற்றும் வெளியேறி நீர் வர தொடங்கியதால், அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், மனைவிக்காக கணவன் கிணறு வெட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.