நுவரெலியாவில் குவியும் உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள்…. சுகாதார பிரிவினரின் எச்சரிக்கை …!

சுற்றுலா பிரயாணிகள் நுவரெலியா வருகை…

நீண்ட காலத்திற்கு பின் பெருமளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா வருகை மற்றும் நடைபாதை வியாபாரமும் வழமை போன்று திரும்பி வருகின்றது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்ததால் சுற்றுலா துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இதனால் பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள், படகு சவாரி, போனி சவாரி உள்ளிட்ட பல துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

இந் நிலையில் தற்போது நீண்ட கால இடைவெளிக்கு பின் நேற்றைய தினம் (26) மூன்று நாட்கள் தொடர் விடுமுறையினை தொடர்ந்து பெரும் தொகையிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நோக்கி வருகை தர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நடை பாதை வர்த்தக நடவடிக்கைகள் வழமை நிலைக்கு திரும்பி வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாத காலமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறைகள் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் நாட்டினதும் பொது மக்களினதும் சுற்றுலா வருபவர்களினதும் பாதுகாப்பு கருதி சுகாதார வழி முறைகளை முறையாக கடைபிடித்து தங்களது உல்லாசங்களை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதே வேளை கடந்த காலங்களில் மக்கள் நடமாற்றிமின்றி காணப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற நீர் வீழ்ச்சிகளான சென்கிளையார், டெவோன் ஆகிய நீர் வீழ்ச்சிகளையும் அதிக சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.

இதனால் இந்த பிரதேசங்களில் நடைபாதை வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.