வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளியால் பதற்றம் … !

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி…

தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர், தப்பிச்சென்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற நோயாளி யாசகர் ஒருவர் என்றும் அவரை தேடிக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தம்புள்ளை நகரினுள் சஞ்சரித்து யாசகத்தில் ஈடுபடும் குறித்த யாசகர் தம்பதியினர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர்.

அதன் போது, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்கள் கொரோனா தொற்றுடையோராக இனங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசலையின் விசேட சிகிச்சை பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த தம்பதிகளில் ஆண் ஒருவரே இவ்வாறு தனது மனைவியை வைத்தியசாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் “சப்பான் சந்திரன்” என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதியாகிய இந்நபரின் நிரந்தர வதிவிடம் குறித்த தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.