சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதை வென்ற ஈழத்து தமிழ் பெண்…!

அமெரிக்க தூரகத்தினால் தெரிவான ஈழத்து பெண்..!

அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.

இந்த தகவலினை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.இந்த விருது வழங்கும் நிகழ்வு காணொளி ஊடாக நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த விருது வழங்கும் நிகழ்வை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும்அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஜில் பைடன், தேர்வு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா ஞானராஜா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தனிப்பட்ட முறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவர், பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா ஞானராஜா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

எனவே உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.