பணம் கொடுக்காததால் தையல் கூட போடாமல் துரத்தப்பட்ட சம்பவம்..! பரிதாபமாக பலியான குழந்தை..!!

இந்தியா…

பணம் போதவில்லை என்பதற்காக ஆபரேஷனை பாதியில் நிறுத்தி வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதி  பிரயாக்ராஜ் மற்றும் மிஷ்ரா.இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சூழலில் சிறுமிக்கு வயிற்றில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராவத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக பெற்றோர் செலுத்தியுள்ளனர்.

ஆனால் மருத்துவமனை சார்பில் 5 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை. எப்படியாவது தங்கள் பிள்ளையை காப்பாற்றி விடுங்கள் என்று பெற்றோர் கெஞ்சி கேட்டுக் கொண்டனர். ஆனால் முழு பணம் செலுத்தினால் தான் அறுவை சிகிச்சையை முடிக்க முடியும் என்று கூறி, சிறுமியின் வயிற்றில் தையல் கூட போடாமல் பாதியிலேயே வெளியே அனுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர், செய்வதறியாது மருத்துவமனை வாசல் அருகே அமர்ந்து கொண்டனர். இதற்கிடையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த சூழலில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குழந்தையின் நிலையைக் காணும் போது நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து முழு விவரத்தையும் சேகரித்து குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தையல் கூட போடாமல் சிறுமி வெளியேற்றப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.