கஞ்சா வாங்க பணம் கேட்ட மகன்..! ஆத்திரத்தில் தந்தை செய்த பகீர் காரியத்தால் பரபரப்பு..!!

இந்தியா…

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த மகனை ஆத்திரம் அடைந்த தந்தை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த செட்டிகுளத்தில் வாழ்பவர் பழனி (50). இவர் திருத்தணி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கோகுல் (21).
கோகுலுக்கு பள்ளியில் படிக்கும் போதே மது அருந்தும் பழக்கமும்,. கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக அண்மைக்காலமாக கஞ்சாவிற்கு கோகுல் மிகவும் அடிமையாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கோகுல் அடிக்கடி பணம் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும், கஞ்சா புகைத்தும் வந்துள்ளாராம். அத்துடன் போதையில் தன் தந்தை பழனியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்திருக்கிறார்.

இதன் காரணமாக, தந்தை – மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது நேற்று மாலை நண்பர்களுடன் கோகுல் வழக்கம் போல் மது குடித்து விட்டு போதையில், தந்தை பழனியின் காய்கறி கடைக்குச் சென்று ரகளை செய்துள்ளார். பணம் கேட்டு பழனியிடம் நச்சரித்துள்தாக தெரிகிறது.

அதனையடுத்து, ஆத்திரமடைந்த பழனி, கோகுலை அடித்துள்ளார். அப்போது போதையில் இருந்த கோகுல் பழனியைத் திருப்பி அடிக்க முயன்றுள்ளார்.

மகனின் நடவடிக்கையால், கோபமடைந்த பழனி, கடையிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கோகுலைப் பலமாகத் தாக்கி இருக்கிறார். அத்துடன் மகனை, கற்களைக் கொண்டும் தாக்கியுள்ளார். பழனி தொடர்ந்து கத்தி மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதால் கோகுல் சம்பவ இடத்திலேயே இறந்துபோயுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து திருத்தணி காவல்நிலையத்திற்குத் தகவல் வந்த நிலையில், அதற்கு முன்னதாகவே, பழனி தானாகவே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி சரண் அடைந்தார். போலீஸார் பழனியைக் கைது செய்து காவலில் வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று கோகுலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.