சொத்துக்காக காதலனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த பெண்..!அம்பலமான உண்மை..!!

தமிழ்நாடு…

தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கொழுந்தனை ஒன்றரைக் கோடி ரூபாய் சொத்துக்காக அண்ணியே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்த உண்மை ஒன்றரை ஆண்டு கழித்து கொலை அம்பலமாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 38 வயதான கொஞ்சி அடைக்கன். இவரது மனைவி 33 வயதான பழனியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கொஞ்சி அடைக்கன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவன் மாயமானது குறித்து பழனியம்மாள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், போலீசார் வழக்கைக் கிடப்பில் போட்டனர்.

இந்த நிலையில் கொஞ்சி அடைக்கனுக்கும் அவரது பெரியப்பா மகன் அண்ணனின் மனைவியான சித்ராவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சித்ராவிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் கொஞ்சி அடைக்கனை சித்ரா கொலை செய்தது அம்பலமானது.

கொஞ்சி அடைக்கனுக்கு ஸ்ரீபெரும்புதூர் சுபத்ரா நகர் பகுதியில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. கொஞ்சி அடைக்கனின் பெரியப்பா மகன் அண்ணனும், அவரது மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பு கொஞ்சி அடைக்கனும் அவர்களுடன் வசித்து வந்தார். அப்போது அண்ணி சித்ராவுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது..பின்னர் சித்ராவிற்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் கோபமடைந்த கொஞ்சி அடைக்கன் காஞ்சிபுரத்தில் குடியேறி, பழனியம்மாளை மணந்து வசித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் வீட்டை விற்பதற்காக, அங்கு தங்கியிருந்த அவரது அண்ணி சித்ராவை காலி செய்யும்படியும், அவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டும் கொஞ்சி அடைக்கன் நெருக்கடி கொடுத்தார். ஆனால் வீட்டை அபகரிக்க நினைத்த சித்ரா காலி செய்ய மறுத்ததோடு கொஞ்சி அடைக்கனை அவமானப்படுத்தியும் வந்தார்.

கொஞ்சி அடைக்கனைக் கொலை செய்து விட்டால் அந்த வீட்டைத் தான் அபகரித்து விடலாம் என சித்ரா திட்டமிட்டு தனக்கு அறிமுகமான ஏழுமலை, ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இந்த நிலையில், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கனை அண்ணி சித்ரா தொடர்பு கொண்டு வீடு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின்னர் டார்ஜான்குமார், விவேக் என்ற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்பிரமணியன், சங்கரநாராயணன் ஆகியோரை அனுப்பி காரில் வரவழைத்துள்ளார். மண்ணிவாக்கம் மேம்பாலத்தின் கீழே காரை கொண்டு சென்று நிறுத்தி, சீட் பெல்ட்டால் கொஞ்சி அடைக்கனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளது அந்தக் கும்பல். பின்னர் சடலத்தின் கை, கால்களைக் கட்டி, ஒரு இரும்பு டிரம்மில் அடைத்துள்ளனர்.

அதன் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டி மூடியுள்ளனர்; பின்னர் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்திலுள்ள சுதர்சன் ரெட்டி என்பவரது கிணற்றில் டிரம்மை வீசி விட்டுத் தப்பியுள்ளனர். கொஞ்சி அடைக்கனை கொலை செய்ய கூலிப்படைக்கு சித்ரா 5 லட்சம் ரூபாய் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் மலைப்பட்டு கிராமத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று சடலம் வீசப்பட்ட கிணற்றை அடையாளம் கண்டனர்.

கிணற்றிலிருந்து இரும்பு டிரம் மீட்கப்பட்டது. அதை உடைத்துப் பார்த்தபோது கொஞ்சி அடைக்கனின் எலும்புகள் மட்டும் கிடந்தன. அவற்றை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சித்ரா, ஏழுமலை, ரஞ்சித், டார்ஜான்குமார், விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க நினைத்து, தன்னுடன் கள்ளத் தொடர்பில் இருந்த கொழுந்தனை அண்ணி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.