சிகிச்சைக்காக சென்ற சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்… பாலியல் வன்புணர்வு செய்த போலி மருத்துவர்!

இந்தியா…

இந்தியாவில் சிகிச்சைக்காக சென்ற சகோதரிகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த போலி மருத்துவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து ராய்பூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரின் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமய் லால் தேவாங்கன் (வயது 48). இவர் அங்கு கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் ஒரு போலி மருத்துவர் என கூறப்படுகிறது. கடந்த 2016 டிசம்பரில் 21 மற்றும் 19 வயதுடைய பெண்கள் இருவரை வயிற்று மற்றும் இடுப்பு வலி காரணமாக அவர்களின் பெற்றோர் போலி மருத்துவரான சமய் லாலிடம் சிகிச்சைகாக அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் சிகிச்சைக்காக அந்த சகோதரிகள் இருவரும் சென்ற நிலையில் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் மாந்த்ரீகம் மூலம் அவர்களின் உடல்நலக் கோளாறை குணப்படுவதாக கூறி இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இந்த கொடுமை தொடர்ந்து அந்த இரு பெண்களுக்கும் அரங்கேறியிருக்கிறது.

இருப்பினும் 2017 செப்டம்பரில் சகோதரிகள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பாக குதியாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சமய் லால் தேவாங்கன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு ராய்பூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாலியல் வன்புணர்வு செய்த சமய் லால் தேவாங்கனுக்கு தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் சட்டீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.