யாழில் அபாயகர நிலமை…! உச்சத்தை அடையும் கொரோனா…!!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோள்….

யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலின் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“யாழ். மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது அதனடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை யாழ்ப்பாணத்தில் 401 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 204 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டோருடன் தொடர்புடைய ஆயிரத்து 756 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் அவதானமாக்ச செயற்பட வேண்டு்ம என்பதுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் 50 பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், மரண வீடுகளில் 25 பேரும் சமூகக் கூட்டங்களில் 150 பேரை மாத்திரமே அனுமதிப்பது எனவும் திருமண நிகழ்வில் 150 பேராக மட்டுப்படுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களியாட்ட நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் விளையாட்டு நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகளிற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னர் அப்பகுதி சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களுடைய அறிவுறுத்தலின்படி குறித்த நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் தற்போதைய காலப்பகுதி ஒரு அபாயகரமான காலப்பகுதியாக உள்ளதால், பொதுமக்கள் பீதி அடையாமல் தமது அன்றாடச் செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.