ஒருதலைக் காதல்… ஆத்திரத்தில் நடந்த கொடூரம்..!துடி துடிக்க இறந்த பச்சிளம் குழந்தை…!!

இந்தியா…

ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோரை கத்தியால் குத்திய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கத்தி பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பச்சிளம் குழந்தை ஒன்று இறந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிசுவின் பெயர் அக்ஷயா குயின் என்பதாகும். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ஆனந்த செலின் – ஏஞ்சலின் தம்பதியினரின் மகளாவார்.

இந்த தம்பதியினர் வெளிநாட்டில் வேலை செய்வதால் 8 மாத குழந்தை அக்ஷ்யா குயினை, ஏஞ்சலின் பெற்றோர் ரசல்ராஜ் – எப்சிபாயிடம் ஒப்படைத்தனர்.
ஏஞ்சலின் தங்கையான ரோஸ்பிளசி, நர்சிங் படிப்பு முடித்து கோவையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். அவர் மீது பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரோஸ்பிளசியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட சிவசங்கரன் இரு தினங்களுக்கு முன்பு ரசல்ராஜ் வீட்டிற்குச் சென்று ரோஸ்பிளசியை பெண் கேட்டுள்ளார்.

இதற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவசங்கரன் மீண்டும் இன்று அதிகாலை ரசல்ராஜ் வீட்டிற்கு சென்றார். அவர் போன நேரத்தில் ரசல்ராஜ் வீட்டில் இல்லை. நடைபயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார்.

ரோஸ் பிளசியின் தாயார் எப்சிபாயும் மற்றொரு சகோதரியும் வீட்டில் இருந்தனர். குழந்தை அக்ஷ்யா குயின் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கையில் கத்தியுடன் அங்கு வந்த சிவசங்கரன் கோபத்தோடு எப்சிபாயிடம் தகராறு செய்தாராம்.
எனக்கு ரோஸ் பிளசியை பெண் கொடுப்பீர்களா? மாட்டீர்களா என்று சிவசங்கரன் கேட்க, அதற்கு எப்சிபாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிவசங்கரன், கத்தியை எடுத்து எப்சிபாயை வெட்ட முயன்றுள்ளார். அப்போது திடீரென அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அக்ஷ்யாகுயின் மீது கத்திபட்டது. இதில் குழந்தை அக்ஷ்யா குயின் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

ஆத்திரம் அடங்காத சிவசங்கரன் எப்சிபாயை சரமாரியாகக் கத்தியால் வெட்டினார். அப்போது வெளியே சென்றிருந்த ரசல்ராஜ் சத்தம் கேட்டு ஓடி வந்தார். கத்தியுடன் சிவசங்கரன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து திருப்பி தாக்கினார். சிவசங்கரன், ரசல்ராஜையும் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரசல்ராஜ் எப்சிபாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். காயமடைந்த இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சிவசங்கரனைத் தேடி வருகின்றனர்.

மேலும் குழந்தை அக்ஷயா குயினை பெற்றோர்களின் பொறுப்பில் விட்டு விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குப் போன ஆனந்த செலின் – ஏஞ்சலின் தம்பதியினர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.