யாழில் திருமணம் நடந்த கையோடு மாயமான மணப்பெண்..!கடிதத்தில் இருந்த காரணம்..!!

யாழில்…

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வரும் விடயம்,வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த மணமக்கள், யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் அன்று இரவு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது அன்று மாலையில் விடுதிக்கு வந்த புதுமண தம்பதிகள் அறைக்கு வந்த சிறிது நேரத்தில், மணமகன் குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து, தனது நெருங்கிய நண்பி அங்கு பணிபுரிவதாகவும், அவருடன் பேசி விட்டு வருவதாக கூறி மணப்பெண் கீழே இறங்கி சென்றுள்ளார்.

குளித்துவிட்டு வந்த கணவன், மனைவியை காணாமல் தொலைபேசி அழைப்பேற்படுத்திய போதும், அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் , அறைக்குள் மனைவி எழுதி வைத்து விட்டு சென்ற சிறிய கடிதத்தை கணவன் கண்டெடுத்துள்ளார். அதில் தன்னை மன்னிக்கும்படியும், தனது காதலனுடன் வாழச் செல்வதாகவும், அந்த பெண் எழுதியுள்ளார்.

மேலும் அவர் விட்டுச்சென்ற பையில் தாலி உள்ளிட்ட சில நகைகளும் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு சங்கிலியை தாயாரிடம் ஒப்படைக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மணப்பெண் விடுதியிலிருந்து வெளியேறி, மோட்டார் சைக்கிளில் இன்னொரு இளைஞனுடன் ஏறிச்செல்லும் காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் உரும்பிராயை சேர்ந்த யுவதி, அந்த பகுதி இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது விருப்பமின்றி கொழும்பு வர்த்தக குடும்பமொன்றில் திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.