யாழ்.போதனா வைத்தியசாலையில் முதலாவது கொரோனா மரணம்!

முதலாவது கொரோனா மரணம்….!

யாழ்- போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண்ணே கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலையடுத்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

வயோதிபப் பெண்ணுக்கு நேற்று மருத்துவ சேவை வழங்கிய அதிதீவிர சிகிச்சை பிரிவு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, வயோதிபப் பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின்தகனம் செய்யப்படவுள்ளது.