பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீ வி.ப.த்.து!1000 கணக்கான அகதிகள் நிர்க்கதி..!!

பங்களாதேஷில் பாரிய தீ விபத்து…!

பங்களாதேஷின் தெற்கில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காக்ஸ் பஜாரின், உக்கியாவில் அமைந்துள்ள பலுகாலி அகதிகள் முகாமில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகளும், ஒரு பெண் உட்பட நான்கு ரோஹிங்கியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் நூற்றுக் கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளதாக த டெய்லி ஸ்டார் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை காலையில் தீப் பரவல் ஆரம்பமானது, அதனை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின் இரவு 11.00 மணிக்கு பின்னர் மீண்டுமோர் தீப் பரவல் வெடித்தது. அதனை அதிகாலை 12.30 மணியளவில் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ரோஹிங்கியா சமூகத் தலைவர்களும் அதிகாரிகளும் விபத்துக்கள் குறித்து த டெய்லி ஸ்டாரிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இன்னும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தீ விபத்தால் 1,500 – 2,000 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளன. 5,000 – 6,000 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பங்களாதேஷின் கூடுதல் அகதிகள், நிவாரண மற்றும் திருப்பி அனுப்பும் ஆணையாளர் மொஹமட் ஷம்சுடோசா தெரிவித்துள்ளார்.