கடக ராசி அன்பர்களே…வரும் புது வருடம் எப்படி இருக்கப் போகிரது தெரியுமா..?

கடக ராசி அன்பர்களே…

வரவுள்ள சித்திரை தமிழ் புத்தாண்டு கடக ராசியினருக்கு எந்த மாதிரியான பலன்களை தரவுள்ளது.

சித்திரை முதல் நாள் உங்கள் ராசி அதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார். கூடவே இரண்டாம் அதிபதியான சூரியனும், மேலும் 4 மற்றும் 11 க்கு அதிபதியான சுக்கிரனும் இணைந்து இருக்கிறார்கள். ஐந்தாம் இடத்தில் கேது பகவானும் ஏழாம் இடத்தில் சனி பகவானும், 8ஆம் இடத்தில் குரு பகவானும், 9-ம் இடத்தில் புதன், பதினோராம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவானும், 12-ம் இடத்தில் செவ்வாய் பகவானும் இருக்கிறார்கள்.

இந்த கிரக அமைப்பு மிக நல்ல பலன்களைத் தரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. குறிப்பாக இரண்டாம் அதிபதியான சூரியன் உச்சமாகவும் லாபஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான், மற்றும் 7-ம் இடத்தில் இருக்கக் கூடிய சனி பகவான் கண்டகச் சனியாக இருந்தாலும் நன்மை தரக்கூடிய இடத்தில் இருப்பதாலும், மிக அதிகப்படியான நற்பலன்களை உங்களுக்கு அருள்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையே இருக்காது. குடும்ப ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையிடம் ஏற்பட்டிருந்த ஒரு சில பிரச்சினைகளும் இப்போது முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்படக் கூடிய அளவில் இருக்கிறது. பிரிந்திருந்த தம்பதி கூட இப்போது ஒன்று சேர்வார்கள். நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஏமாற்றம் தந்த நண்பர்கள், கூட்டாளிகள் விலகிச் செல்வார்கள். இனி உங்களுக்கு தொல்லை தர மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.

மன வருத்தம் ஏற்பட்டு விலகிச் சென்ற சகோதர சகோதரிகள் மீண்டும் சேருவார்கள். தாய் தந்தையரின் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய நோய்த் தன்மை வெகுவாகக் குறையும். சொத்துப் பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்வார்கள். அதேபோல நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பும் உள்ளது. தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த பாகப்பிரிவினைகள் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்படும்.

திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆன்மிகப் பயணங்கள் குடும்பத்தோடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ வழிபாடும், நேர்த்திக் கடன்களும் இப்போது நிறைவேறும்.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது தனியாக தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். அயல்நாடு தொடர்பு உடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உற்பத்தி சார்ந்த பொருட்கள் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது தொழில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும்.

உழவுத்தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு உழவுத் தொழிலில் புதுமைகளை புகுத்தி வெற்றி காண்பீர்கள். விவசாய இயந்திரங்கள் தொடர்புடைய தொழில், இடுபொருட்கள் தொடர்பான வியாபார தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் நல்ல தொழில் வளர்ச்சி உண்டாகும்.

பங்கு வர்த்தக தொழில், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சி உண்டாகும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு கட்டி முடித்து இதுவரை வியாபாரம் ஆகாமல் இருந்த கட்டுமானங்கள் அனைத்தும் இப்போது விற்பனையாகும். நஷ்டத்திலிருந்து லாபத்தை நோக்கி திரும்புவீர்கள்.

நடைபாதை வியாபாரிகள் முதல் மிகப்பெரிய நிறுவனங்களின் வியாபாரிகள் வரை அனைவருக்கும் ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும். லாபகரமான புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், உணவகம் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக டிராவல்ஸ் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து தங்களுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உண்டு. உணவகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்குவது, தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்றவை நடக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சீரான வளர்ச்சியும், தகுந்த அங்கீகாரமும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு பலருக்கும் உள்ளது. வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சிறப்பாக இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.

திரைத்துறை கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். மிகப் பெரிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும். அடுத்தடுத்து புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இசை, நாடக, நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஆதாயம் தரக்கூடியதாகவும் இருக்கும். தங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகளை தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு.

பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக் கூடிய ஆண்டாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கணவரோடு ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் மனைவிக்குள் மீண்டும் ஒற்றுமை மலரும்.

கடன் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். தந்தைவழி சொத்து எந்தத் தடையும் இல்லாமல் கிடைக்கும். வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பும் சிறப்பாக இருக்கிறது, முறையாக முயற்சி செய்தால் நிச்சயமாக அரசுப் பணி கிடைக்கும். வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய வியாபார வாய்ப்புகளும் கிடைக்கும். நேரத்தை திட்டமிட்டு வகுத்துக் கொண்டு செயல்பட்டால் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும் விரும்பிய கல்வி கிடைக்கும். கல்விக்குத் தேவையான அனைத்து வகை உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்விக்கான வங்கிக்கடன் எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும், கல்லூரிப் படிப்பு முடியும் தருணத்தில் இருப்பவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

பொதுவாக கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் பெரிதாக ஏதும் இருக்காது, ஆனாலும் ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சலால் ஏற்படக்கூடிய உடல் சோர்வு, மூட்டுவலி, கால் பாதங்களில் பிரச்சினைகள், மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கவனமாக இருந்தால் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

சனிபகவானை வழிபாடு செய்வது அவசியம். வீட்டுக்கு அருகில் இருக்கும் விநாயகர் ஆலய வழிபாடும், அந்த ஆலயத்திலேயே இருக்கக்கூடிய நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுவதும் நல்ல பலன்களைத் அதிகப்படுத்தித் தரும்.