கோடைகாலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?.!

கோடை காலம்

கடந்த மார்ச் மாதத்தின் பாதியில் இருந்தே கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் உடலுக்கு குளிர்ச்சியான மற்றும் இயற்கையான உணவுகளை மக்கள் அதிகளவு வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர்.

ஆனால், வெயில் காலத்தில் சாப்பிட கூடாத சில வகை உணவுகள் இருக்கிறது. இதனை கோடைகாலத்தில் தவிர்ப்பது நமது உடல் நலத்திற்கு நல்லது. அந்த வகையில், நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது. இவை உடலின் வெப்பத்தை அதிகரித்து, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடல் நீரை வற்றவைத்துவிடும்.

இதனைப்போன்று, புளிப்பு மற்றும் உப்பு, காரம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை மசாலா பொருட்கள் போன்றவை உணவிற்கு காரத்தினை அதிகளவு தரும் என்பதால், அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

எண்ணெய் பலகாரங்கள், அடிக்கடி காபி மற்றும் தேநீர் அருந்துதல் போன்ற பழக்கத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கிரீம் அதிகளவுள்ள இனிப்பு பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் உண்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்ச்சியான குளிர்பானங்கள் மூலமாக இரத்த குழாய்கள் சுருங்கி உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தும் என்பதால், கோடை காலத்தில் குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தாமல் இருக்கலாம். அல்லது உச்சி வெயில் சமயங்களில் அருந்தாமல் தவிர்ப்பது நல்லது.

கத்தரிக்காய், கிழங்கு வகைகள் மற்றும் மாவு வகை உணவுகள் போன்றவற்றையும் அடிக்கடி உண்ண கூடாது. பயிறு, எள்ளு, ராகி, அதிகளவு மைதா கலந்த உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாலையோர பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.