குஜராத்தை நோக்கி செல்கிறது அதிதீவிர டவ்-தே புயல்… கேரளாவில் 2 பேர் உயிரிழப்பு…

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக கேரளாவில் கடுமையான காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
புயல் மழை தொடர்பான விபத்துகளில் கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா ஒருவர்  உயிரிழந்துள்ளனர். புயல் தீவிரமடைந்துள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழை பெய்துவருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டவ்-தே புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
டவ்-தே புயலானது தற்போது மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள புயல், கடந்த 6 மணி நேரமாக 9 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வடக்கு நோக்கி தொடர்ந்து நகரும் டவ்-தே புயல், நாளை மாலை குஜராத் கடலோர பகுதியை தாக்கும் என்றும், போர்பந்தர்-மகுவா இடையே 18ம்தேதி காலையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.