அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கடுமையாக ஆட்சேபிக்க தீர்மானம்…

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கடுமையாக ஆட்சேபிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஐந்து பிரதிநிதிகளினால் கடந்த மாதம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை எனவும், அடிப்படையற்ற தகவல்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த விடயங்கள் பிரேரணையின் நோக்கத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரேரணை வெறுமனே ஒரு மனித உரிமை சார்ந்த பிரேரணை அல்ல என வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக, அந்த அமைப்பின் ஆதவாளர்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிளினால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.