தன் தாய்க்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக் கூடாது! கொரோனாவால் இறந்த தாய்க்காக வெளிநாட்டில் இருக்கும் தமிழர் செய்து வரும் நெகிழ்ச்சி உதவி…

தமிழகத்தில் தன்னுடைய தாய் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கொரோனாவால் உயிரிழந்ததால், தமிழர் ஒருவர் இது போன்ற நிலை மற்றவர்களுக்கு வரக் கூடாது என்று இலவசமாக உதவி செய்து வருகிறார்.

மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அவுஸ்திரேலியாவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய தாய் தனமணி, விருதுநகரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் தனமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவனைக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் வீட்டிலே இருந்த அவர், போதிய ஆக்ஸிஜன் வசதி இன்றி, முச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

தன்னுடைய தாய்க்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு விடுவதற்கு சிரம்பட்டு உயிரிழந்ததை வீடியோ கால் மூலம் பார்த்து பரிதவித்த பாலமுருகன், இதுபோன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தேவைப்படும் ஏழைகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

அதன் படி, போடி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு என மொத்தம் 6 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

ஆக்ஸிஜன் செறிவூட்டி மூலம் ஒரு நோயாளிக்கு 7 நாட்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருவதாகவும், இதன்மூலம் மருத்துவமனையில் வேறு ஒருவருக்கு சிகிச்சை கிடைக்கும் சூழல் உருவாகும் என்று பாலமுருகனின் நண்பர் அருள் ஏசுதாஸ் என்பவர் கூறியுள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழ்வதை தடுக்க தனது நண்பர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியாவில், பணிபுரிந்து வரும் பாலமுருகன் செய்து வரும் இந்த உதவி பலராலும் பாராட்டப்படுகிறது.