வட்டவளை பகுதியில் வீதி விபத்து – ஒருவர் பலி 6 பேர் காயம்…

ஹட்டன் – வட்டவளை பகுதியில் வேன் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பாக பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், வேனில் பயணித்த உபபொலிஸ் பரிசோதகர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூன்று பேர் மற்றும் வேன் சாரதி உள்ளிட்ட 6 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலைக்காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.