மூத்த சீன உளவுத்துறை அலுவலர் அமெரிக்காவுக்கு தப்பி வுஹான் ஆய்வக இரகசியங்களை வெளியிட்டதாக பரபரப்பு தகவல்

சீனாவில் உளவுத்துறையில் மூத்த அலுவலராக இருந்த ஒருவர் அமெரிக்காவுக்குத் தப்பிவந்து, வுஹான் ஆய்வகம் குறித்த இரகசியங்களை வெளியிட்டதாக வெளியாகியுள்ள ஒரு செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீன பாதுகாப்புத் துறையில் துணை அமைச்சராகவும், சீன உளவுத்துறையில் முக்கிய அலுவலராகவும் இருந்தவர் Dong Jingwei. பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி தனது மகளுடன் சீனாவிலிருந்து தப்பிய Dong, அமெரிக்கா வந்ததாகவும், அவர்தான் வுஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியது தொடர்பான இரகசியங்களை அமெரிக்காவுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்தே அமெரிக்க அதிபரான ஜோ பைடன் வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதா என்பதை அறிவதற்கான விசாரணையை முடுக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் இது வதந்தியாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், மறுபக்கம் இந்த செய்திக்கு ஆதரவாக தகவல் வெளியிட்டுள்ளவரும் இதேபோல் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பிவந்த சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சக அலுவலரான Dr Han Lianchao என்பவர் என்பதால், அது நம்பத்தகுந்த செய்தியாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், Dong சீனாவில் ஒரு துணை அமைச்சராக இருந்தவர் என்பதால், இப்படி சீனாவிலிருந்து தப்பி வந்தவர்களில் உயர் மட்ட அலுவலர் அவராகத்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.