மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து எரித்த கணவன்..!

இந்தியாவில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி சடலத்தை  சூட்கேசில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் ஆந்திராவின் திருப்பதியில் தான் நடந்துள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்று பொலிசார் விசாரணை நடத்தினர்.

அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்திய பொலிசார், அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

இதில் அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி (27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஸ்ரீகாந்த் என்பவர்,தனது காதல் மனைவி புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் எடுத்து வந்து கொளுத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், ஸ்ரீகாந்த் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கும் புவனேஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை துண்டு துண்டாக வெட்டி கொன்றிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஸ்ரீகாந்தையும், அவருக்கு உதவியாக இருந்த டாக்சி ஓட்டுனரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.