‘கோவேக்சின்’ தடுப்பூசியை கொள்முதல் செய்வற்கான ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்- பிரேசில் அறிவிப்பு…

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது.

விரிவான ஆய்வுக்கு பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏற்கனவே அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.