ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து வான் தாக்குதல்: 33பேர் உயிரிழப்பு- 19பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான் தாக்குதலில், 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 19பேர் காயமடைந்தனர்.

வடக்கு பால்க் மாகாணத்தின் கல்தார் மற்றும் ஷோர்டெபா மாவட்டங்களில், போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக வடக்கு பிராந்தியத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் தெரிவித்தார்.

அத்துடன் இந்த வான்வழித் தாக்குதல்களின் போது பெரும் அளவிலான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் வெடிமருந்துகளும் அழிக்கப்பட்டன.

மே 1ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான படைகள் திரும்பப் பெறத் தொடங்கியதிலிருந்து நிலத்தை அடைய தலிபான்கள் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆப்கானில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.