ஆரணி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…

ஆரணியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- ஜெயகாந்தி என்பவரின் மகன் பாலமுருகன். இவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகள் உமாசங்கரி (வயது 26) என்பவருக்கும் கடந்த மாதம் 23-ந் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
பாலமுருகன் சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த உமாசங்கரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் மாமியார் ஜெயகாந்தி, மாமனார் தனசேகரன் ஆகியோர் ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசுக்கும், உமாசங்கரியின் பெற்றோருக்கும் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆனதால் ஆரணி உதவி கலெக்டர் ஆர்.கே.கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.