மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு…

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு- இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில், மட்டக்களப்பு- இலங்கை ஆசிரியர் சங்கம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் ஒரு வருடமும் மூன்று மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயத்திற்கு அரசாங்க எந்தவிதமான நடவடிக்கையோ அல்லது தீர்வையோ வழங்குவதாக தெரியவில்லை. ஆகவேதான் அரசுக்கு எதிராக இத்தகைய முறைப்பாட்டை நாம் பதிவு செய்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆகையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இணையத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு சமவாய்ப்பு இல்லாத  காரணத்தினால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளில் இடைவிலகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருக்கும் தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள் வெறும் பலகையை மட்டும் வைத்துக்கொண்டு கற்றல் செயற்பாடுகள் எதுவுமே இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதில் காட்டும் அக்கரையினை ஏன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அரசாங்கம் காட்டுவதில்லை.

இதேவேளை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கவில்லை இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபம் மீறப்பட்டுள்ளது” என இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.