லடாக் பகுதியில் பெப்ரவரிக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது – நரவானே

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் கடந்த பெப்ரவரியில் படைகளை விலக்கிக் கொண்ட பிறகு இயல்பு நிலை தொடர்கிறது என இராணுவ தலைமைத் தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

காணொலி முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்தும், கைலாஷ் தொடரில் இருந்தும் கடந்த பெப்ரவரியில் இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கிக் கொண்டன.

அப்போதிலிருந்து எல்லைக் கோட்டுப்பகுதியில் அமைதி நிலவுகிறது. எல்லையில் முழுமையாக அமைதி திரும்புவதற்காக சீன அரசுடன் அரசியல் ரீதியாகவும், தூதரகரீதியாவும், இராணுவரீதியாகவும் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை கட்டமைக்க உதவிகரமாக இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மற்ற சில பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.