அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து முகைதீன் கவலை!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரகேறிய அநீதியை மறந்து அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றதென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் முஸம்மில் முகைதீன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த  காலங்களில் முஸ்லிம்களை இனவாதிகள், மதவாதிகள் என சித்தரித்து ஈஸ்டர் தாக்குதலை தனக்கு சாதகமாக  அரசாங்கம் பயன்படுத்தி கொண்டது.

மேலும் முஸ்லிம்கள் இலங்கையை முழுமையாக பிடிப்பார்கள் என தவறான புரிதலை பெரும்பானமை சமூகத்தினரிடம் ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய அரசிடம்,  சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்கள் கடந்த தேர்தல் காலங்களை முற்றாக மறந்து செயல்படுகின்றனர். அதாவது, அரசாங்கத்தின் கோடாரி காம்புகளாக இருக்க விரும்பும் அரசியல் தலைவர்களே,  நீங்கள் இந்த அரசை எப்படி விமர்சித்து முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றீர்கள் என்பதை நீங்கள் மறந்தாலும் சமூகம் ஒருபோதும் மறக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.