ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கல்லூரி மாணவன் தற்கொலை…

image_pdfimage_print

இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான அனுஜித் அனில், தாயாரிடம் சண்டையிட்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான அனுஜித், நாள் முழுக்க உணவு தண்ணீர் இன்றி தனது அறைக்குள் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று 2,000 ரூபாய் தொகைக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தர தாயாரிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொடுத்துள்ளனர்.

எஞ்சிய தொகையை நண்பன் ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்த சொல்லி மீண்டும் சண்டையிட்டுள்ளான். இதனையடுத்து அறைக்குள் சென்ற அனுஜித் தற்கொலை செய்து கொண்டதாக தாயார் அஜிதகுமாரி தெரிவித்துள்ளார்.

மூத்தமகன் அபிஜித் கடந்த 2012ல் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், உடல் உறுப்புகளை தானமாக அளித்திருந்தனர். அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான தங்களது இரண்டாவது மகனும் மரணமடைந்தது தாங்க முடியாத சோகம் என தெரிவித்துள்ளனர்.

ஒன்லைன் விளையாட்டுக்கு என 33,000 ரூபாய் மதிப்பிலான மொபைல்போன் வேண்டும் என சண்டையிட்ட அனுஜித், இல்லை என்றால் சாலையில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால், அதுவும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மகனின் போக்கு குறித்து கவலை கொண்ட அஜிதாவும் கணவரும், உளவியல் ஆலோசனைக்காக மகனை கட்டாயப்படுத்தியும் பலனில்லாமல் போயுள்ளது.

ஒன்லைன் விளையாட்டில் அடிமையான கல்லூரி மாணவனின் தற்கொலை சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியதுடன், பொலிஸ் தரப்பில் இருந்து தற்போது பெற்றோர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.