24 மணி நேரமாக பற்றி எரியும் தொழிற்சாலை- 40 பேர் உயிரிழப்பு…

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பற்றி, பின்னர் மளமளவென பரவியது.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் மேல் தளங்களில் உள்ள ஊழியர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். உயிருக்குப் பயந்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரத்தை கடந்தும் தீ கொழுந்துவிட்டு எரிவதால் அந்த கட்டிடத்தினுள் சென்று மீட்பு பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு, கயிறு மூலம் கட்டிடத்தின் மேல்தளத்தை அடைந்து மீட்பு பணியை தொடங்கினர். மேல் தளத்தில் இருந்த 25 பேர் மீட்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் மூன்று இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. மீட்புக் குழுவினர் மேல் தளத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு ஏராளமானோர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இன்று மதியம் வரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீயை முழுமையாக கட்டுப்படுத்தியபின்னர் மற்ற தளங்களுக்கு சென்று மீட்பு பணியை தொடங்க முடியும் என தெரிவித்துள்ளனர். எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.