வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

image_pdfimage_print

வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு…!

புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம் (24) முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமைய பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ கொட்டுக்கச்சிய கந்தயாய பகுதியைச் சேர்ந்த முதியன்சலாகே குணவர்தன எனும் 79 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துக்கொடுத்த பின்னர், அந்த முதியவர் சடலமாக மீட்கப்படும் வரை தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அந்த ஆறு பிள்ளைகளும் தமது குடும்பத்துடன் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டை சோதனை செய்த பொலிஸார், அந்த வீட்டின் அறையிலிருந்து முதியவரின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸாருடன், குற்றவியல் பிரிவு பொலிஸாரும் இணைந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

அத்துடன், குறித்த சடலம் மரண விசாரணையின் பின்னர் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தில் கொலை செய்யப்பட்டமைக்கான சந்தேகத்திற்கு இடமான எவ்வித தடயங்களும் இருக்கவில்லை எனத் தெரிவித்த புத்தளம் தலைமைய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. குமாரதாச, எனினும், பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காணரத்தை உறுதியாக கண்டறிய முடியும் எனவும் தெரிவித்தார்.