மட்டக்களப்பில் பலருக்கு டெல்டா வைரஸ் தொற்று- 10 வயது சிறுவன் பலி..!

image_pdfimage_print

மட்டக்களப்பில் பலருக்கு டெல்டா தொற்று….

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா திரிபு வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரம் 1,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது அதில் 43 பேருக்கு டெல்டா திரபு வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரசும் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 2 பேரின் அறிக்கை கிடைக்கவில்லை

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா திரிபு வைரஸ் இருக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றது. எனவே பொதுமக்க ஊரடங்கு சட்டத்தை மீறி தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் அதேவேளை சுகாதார துறையினரின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு அவர் கூறியுள்ளார்.