மட்டக்களப்பு வலையிறவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

image_pdfimage_print

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு வாவியில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று(15) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யோகநாதன் ராயூ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி எருவிலைச் சேர்ந்த குறித்த நபர் காயமடு பகுதியில் திருமணம் முடித்து அங்கு ஹோட்டல் ஒன்று நடாத்தி வருவதாகவும், அந்த நிலையில் அந்த ஹோட்டலில் வேலை செய்த பெண் ஒருவரைக் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திருமணம் முடித்ததையடுத்து முதல் மனைவி வவுணதீவு பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் குறித்த நபரை அழைத்து விசாரணையின் பின்னர் அவர் தனது சகோதரிகளிடம் செல்வதாக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று வலையிறவு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் வாவியின் நடுப்பகுதியில் மிதந்த சடலத்தைப் படகு மூலம் கரைக்குக் கட்டியிழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கரைக்குக் கொண்டுவந்தவர் காணாமல் போன தனது கணவர் என அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டியதையடுத்து சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.