நாடு கடனில் உள்ளது; கோடிக்கனக்கில் பினாமி வைத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிரூபமா…!

பன்டோரா ஆவண விவகாரம்..!

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பன்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டுள்ளன.

அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிரூபமா ராஜபக்ஷவிடம் (Nirupama Rajapaksa) 35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து இவற்றினை பொய் என கூறுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிரூபமா ராஜபக்ஷவிடம் 35,000,000,000 ரூபாய் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக பன்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

நிரூபமா முன்னாள் பிரதி அமைச்சராவார்.

பிரதி அமைச்சரிடம் அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது. தற்போது வரையிலும் நிரூபமாவின் கணவருக்கு விஐபி சலுகைகள் வழங்கப்படுகின்றது. இவை எந்த பின்னணியில் வழங்கப்படுகின்றதென தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 3 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் (Thushara Indunil) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒரு புறம் யொகானி என்ற பாடகி சர்வதேச அளவில் புகழ் பெற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்க இன்னொரு புறம் நிரூபமா ராஜபக்ச என்ற பெண்ணும் சர்வதேச அளவில் புகழ்பெற்றதையிட்டு இலங்கையராக நாம் வெட்கப்படுகின்றோம்.

இந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிரூபமா ராஜபக்ச என்பவர் வெளிநாட்டில் திருட்டுத்தனமாக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாவை சேமித்து வைத்த நிலையிலேயே புகழ் பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்படுகின்றது.