அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கு வெள்ளை மாளிகையின் அறிவிப்பு…!

அமெரிக்கா செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு..!

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பு அவசர பயன்பாட்டுக்காக அங்கீகரித்த எந்தவொரு கோவிட் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் அமெரிக்காவிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த விடயத்தை சீ.டீ.சீ என அழைக்கப்படும் அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. 

இதனடிப்படையில், ஃபைசர், மேடர்னா, ஜேன்சன், சினோபார்ம் மற்றும் சினோவேர்க் ஆகிய கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.