இராகலை தீ விபத்து கொலையா..? வௌியாகும் உண்மைகள்..!!

இராகலை தீ விபத்து..!

அன்மையில் நடந்த ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க வலப்பனை நீதிமன்றம் நேற்று (12) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள் கடந்த நான்கு நாட்களாக விசாரணையில் ஈடுபட்டு வந்திருந்தன.

இதன் போது சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரனை இராகலை பொலிஸார், கடந்த இரண்டு தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இதன் போது தீ விபத்து சம்பவம் தொடர்பில் ஒரு சில உண்மைகள் வெளிவந்துள்ளன. இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த அவரை நேற்று (12) பகல் பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரை வலப்பனை நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்மாதம் (07) ஆம் திகதி இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் ஆறு பேர் வசித்து வந்த வீட்டில் ஒரு வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயான தங்கையா நதியாவின் இரண்டாம் கணவருக்கு பிறந்த மோகனதாஸ் ஹெரோசனுக்கு முதலாவது பிறந்த நாள் சம்பவ தினத்தன்று இரவு கொண்டாடப்பட்ட பின்னரே தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த தங்கையாயாவின் மகனான இரவீந்திரன் மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.