தாயின் ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 40 வயது நபர் – உருக வைக்கும் காரணம்

இந்தியா

தன்னை பெற்றெடுத்த தாயின் ஆசையை நிறைவேற்ற 40 வயது மகன் மருத்துவமனை வளாகத்திலேயே தனது தாய்மாமன் மகளை கரம்பிடித்த நிகழ்வு நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்காமு நகர் பகுதியை சார்ந்தவர் தயாளன் (வயது 40). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவரை எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

தயாளனின் தாயார் முத்தாலம்மாள் (வயது 67). இவர் கடந்த 2 தினத்திற்கு முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

மகன் 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறானே என்று வருத்தத்தில் இருந்து வந்த முத்தாலம்மாள், மகனிடம் இறுதியாக எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தயாளனும் தாயாரின் ஆசையை நிறைவேற்ற உறுதிசெய்துள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு முத்தாலம்மாளை பார்க்க வந்திருந்த தயாளனின் தாய்மாமன் மகள் காயத்ரி (வயது 30) என்பவரை திருமணம் செய்து வைக்க பேசி முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று மாலை தயாளன் – காயத்ரி தம்பதிகளின் திருமணம் நடைபெற்று முடிந்தது.

மணமக்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், விஷயத்தை அறிந்த பிற நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களும் மணமக்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தாயாரை நேரில் பார்த்து ஆசி வாங்க தயாளன் முற்பட்ட நிலையில், முத்தாலம்மாள் கொரோனா வார்டில் இருந்ததால் மருத்துவர்கள் அனுமதி கொடுக்கவில்லை.

இதனையடுத்து, தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை தாயாரிடம் தெரிவித்துவிடுமாறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்த தயாளன், தனது மனைவியுடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.