இலங்கைத் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்க்கும் நிரஞ்சனி!

நிரஞ்சனி சண்முகராஜா

இலங்கைத் திரைப்படத்துறையை சேர்ந்த நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு நைஜீரியாவில் நடந்த ‘பேயல்சா’ உலக திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரஞ்சனி நடித்த ‘இனி அவன்’, ‘கோமாளி கிங்க்ஸ்’ போன்ற திரைப்படங்கள் அதிகம் பேசப்பட்டவை.

அத்தோடு அவர் நாயகியாக நடித்த சிங்கள திரைப்படமான ‘கிரிவெசிபுர’ வரலாற்றுப் படம் அவருக்கு மேலும் புகழை தேடிக் கொடுத்தது.

இந்த வரிசையில் நிரஞ்சனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சுனாமி’ படத்திற்கு நைஜீரியாவில் நடந்த உலக திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள மொழியில் வெளியான ‘சுனாமி’ திரைப்படத்தில் ‘கல்யாணி’ என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை நிரஞ்சனி வெளிப்படுத்தியிருந்தார்.

83 நாடுகளில் வெளியிடப்பட்ட 1,300 திரைப்படங்கள் ‘பேயல்சா’ உலக திரைப்பட விழாவிற்காக பரிந்துரைக்கப்பட்டன.

இதில் இலங்கையில் இயக்கப்பட்ட ‘சுனாமி’ திரைப்படத்துக்கு சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நிரஞ்சனி, தமிழ், சிங்கள நாடகங்கள், திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் இதுவரை 8 விருதுகளை பெற்றிருக்கின்றார்.

சர்வதேச அளவில் ஏற்கெனவே பூட்டானில் நடந்த ‘ட்ரக்’ திரைப்பட விழாவிலும் இவர் விருது பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.