இலங்கையில் பயணப்பைக்கு சடலமாக மீட்கப்பட்ட பெண்! இருவர் கைது

இலங்கை

இந்த வாரம் சப்புகஸ்கந்த, மாபிமவில் குப்பை மேட்டில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உயிரிழந்த பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைகள் கட்டப்பட்டு பயணப் பையில் வைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் சடலம் மாளிகாவத்தையைச் சேர்ந்த மொஹமட் சபீக் பாத்திமா மும்தாஸ் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரது கணவர் நவம்பர் 1ஆம் திகதி புளூமெண்டல் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.


பெண்ணின் சடலம் ராகம வைத்தியசாலையில் அவரது கணவரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. உயிரிழந்த பெண் கந்துவட்டிக்காரர் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் ஒக்டோபர் 28ஆம் திகதி மாலை வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் பெண் ஒருவருடனும் மற்றுமொரு ஆணுடனும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.