தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி கிடையாது!

image_pdfimage_print

சட்ட மாஅதிபர் அனுமதி; விரைவில் App அறிமுகம்

பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் போது, கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பது தொடர்பிலான சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு கடந்த வாரம் சட்ட மாஅதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்றையதினம் (08) அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, அவர் தெரிவித்தார். உலகிலுள்ள பல நாடுகள் இந்நடைமுறையை பேணி வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அந்த வகையில், சுகாதார அமைச்சு எனும் வகையில் இது தொடர்பில் செயலியொன்றை உருவாக்கி அதனை காண்பிப்பதன் மூலம் பொது இடங்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும், அவ்வாறு இல்லையெனின் உரிய அனுமதியை வழங்காமலிருக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இவ்விடயம் தொடர்பிலும் பலர் நீதிமன்றம் செல்ல முற்படுவார்கள் ஆயினும் அதனையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் 71% ஆனோருக்கு கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறு மேற்கொண்ட உலகிலுள்ள முதல் 5 நாடுகளில் இலங்கை உள்ளாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.