முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு! இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய திட்டம்!

இலங்கை


இலங்கையில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன் இணைந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில் முச்சக்கரவண்டியின் உரிமையாளரின் விவரங்கள் ஸ்டிக்கரில் சேமிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, தம்மிடம் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு மட்டுமே குறித்த ஸ்டிக்கர்களை பொலிஸார் வழங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் அப்ளிகேஷன் மூலம் குறித்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கான மென்பொருள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் முச்சக்கரவண்டியின் அனைத்து விவரங்களையும் பொலிஸார் பெற்றுக் கொள்ள முடியும் என தெரியவருகிறது.


இந்த புதிய நடவடிக்கையானது முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுக்க உதவுவதுடன், நாட்டில் தற்போதைய நிலையில் அதிகரித்து வரும் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.