யாழ். மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மாவட்டச் செயலாளர் க.மகேசன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

ஆகையினால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” எனவும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாள்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்ற அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது. அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த எாிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எாிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காணமுடிகின்றது.