யாழ். வீதியில் குப்பைகளை வீசி சென்றவர்களை மீண்டும் அள்ள வைத்த பொலிஸார் !

இலங்கை

யாழ்.தொல்புரம் பகுதியில் பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் குப்பைகளை வீசி சென்றவர் சீ.சி.ரீ.வி கமராவில் சிக்கியதால் கொட்டிய குப்பைகளை அவரையே பொலிஸார் அள்ள வைத்தனர். உழவு இயந்திரத்தில் தன்னுடைய வீட்டு குப்பைகளை ஏற்றிவந்த குறித்த நபர் மக்கள் பாவனையில் உள்ள வீதிகளில் பொறுப்பற்ற விதமாக வீசியவாறு சென்றுள்ளார்.

இது தொடர்பாக ஆராய்ந்த அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது வேண்டுமென்றே குப்பைகளை வீசி சென்றமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை ஆதாரமாக கொண்டுவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் குப்பைகளை வீசி சென்ற நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அந்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவரை கண்டித்துள்ளார்.

மேலும் கொட்டிய குப்பைகளை அகற்றவேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து குப்பையை வீசிய நபரும், குப்பைக்கு சொந்தக்காரரான கடை உரிமையாளர் ஒருவரும் பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை அள்ளி அகற்றினர்.