ஜனாதிபதி 30 ஆம் திகதிக்குள் பதவி விலகாவிடின் பாரிய மக்கள் போராட்டம்!

image_pdfimage_print

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால் , பாரிய மக்கள் அலையை கொழும்பில் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

எனினும் அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறாமல் பலத்த பாதுகாப்புடன் உள்ளார். இது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும். மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் அங்கிருந்து பேரணி ஆரம்பமாகும். நாளை கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும் , 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் , 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் , 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கலவரையும் , 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் பேரணி இடம்பெறவுள்ளது. பேரணி நிறைவடைந்த மறுநாள் மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் பாரிய மக்கள் கூட்டம் இடம்பெறும்.

அதற்கமைய எமது பேரணி நிறைவடையும் நாள் வரை ஜனாதிபதிக்கு கால அவகாசத்தை வழங்குகின்றோம். ஏப்ரல் 30 ஆம் திகதியும் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் முதலாம் திகதி பாரிய மக்கள் வெள்ளத்தை திரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.